"சோறு போட வராத பிள்ளைகள், கொள்ளிபோடவும் வரக்கூடாது" ஒரு தாயின் குமுறல்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் இயங்கி வரும் குமரன் பாலிடெக்னிக் உரிமையாளர் மீதும் அவரது சகோதரர் மீதும் அவர்களது தாய் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சென்னை மீஞ்சூர் விநாயகா ஐ.டி.ஐ. மற்றும் குமரன் பாலிடெக்னிக் ஆகியவற்றின் உரிமையாளர்களான வாணிதாசன், உத்ராபதி சகோதரர்களின் தாய் பாக்கியம்மாள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் 4 ஆண்டுகளுக்கு முன் தனது கணவர் கலியபெருமாள் உயிரிழந்த நிலையில், மகன்கள் இருவரும் மாதம் ஒரு சொற்ப தொகையை வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவதோடு சரி, தன்னை நேரில் வந்து பார்ப்பதில்லை என்று கூறுகிறார் பாக்கியம்மாள். தனது ஒரே மகளும் அவரது கணவருமே தன்னை கவனித்துக் கொள்வதாகவும் எனவே அவர்களது மகன் தான் தனக்கு கொள்ளிபோட வேண்டும் என்று கூறும் பாக்கியம்மாள், அதற்கு இடையூறாக தனது மகன்கள் வரக்கூடாது என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
கணவர், மகன்கள், மகள் என கூட்டுக்குடும்பமாக வசித்தபோது அத்தனை பேருடைய உழைப்பில் வாங்கிய சொத்துகள் அனைத்தையும் மகன்கள் இருவருமே பங்குபோட்டுக் கொண்டு தன்னைக் கைவிட்டு விட்டதாக பாக்கியம்மாள் கூறுகிறார். எனவே தனது கணவர் பெயரில் இருக்கும் சொத்தில் ஒரு பங்கையாவது தன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும் கூறும் பாக்கியம்மாள் கண் பார்வை கோளாறு, காலில் அறுவை சிகிச்சை என மருத்துவ செலவுக்கே வழியின்றி தவித்து வருவதாகவும் கூறுகிறார்.
தாயின் இந்தப் புகாரை மறுக்கும் அவரது மகன் வாணிதாசன், அவரை தங்களோடு வருமாறு அழைத்தாலும் வர மறுக்கிறார் என்றும், தங்கையின் தூண்டுதலின் பேரில் சொத்தை அபகரிக்க நினைக்கிறார் என்றும் கூறுகிறார். சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுக்கவே தங்களது தாய் இவ்வாறு செய்கிறார் என்றும் வாணிதாசன் தெரிவித்தார்.
இருவரில் யார் சொல்வது உண்மை ? என்பதை கண்டறிந்து மூதாட்டிக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments